“சசிகலாவிற்கும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி” - அமைச்சர் உதயநிதி பரப்புரை!
சசிகலாவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தெரிவித்தார்.
சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் குரங்குச்சாவடி பகுதியில் இன்று தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,

“திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது 100% இல்லை 1000% உறுதி. சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கு விடுதியுடன் கூடிய கட்டிடம் ரூ.32 கோடிக்கு கட்டப்பட்டுள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையம் ரூ.92 கோடிக்கு அமைக்கப்பட்டுள்ளது. டைட்டில் பூங்கா பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அது விரைவில் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அதன்மூலம், ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
பிரதமர் மோடி வெறும் வாயில் வடை சுடுகிறார். தேர்தலுக்காக நாடகம் ஆடுகிறார். திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும். யார் காலிலும் விழாமல் தவழ்ந்து போகாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சசிகலாவுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. திமுகவினர் பச்சோந்திகள் கிடையாது. கொரோனா காலத்தில் தைரியமாக செயல்பட்டவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். கொரோனாவை தமிழ்நாட்டில் முழுமையாக ஒழித்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. காலை உணவு திட்டம் மூலம் உலகின் அனைத்து நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது திமுக அரசு”
இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.