"பாஜகவிற்கு துணை போகும் எடப்பாடி மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார்" - செல்வப்பெருந்தகை பேட்டி!
தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் நகர் மன்ற தலைவர் சாந்தி சதீஷ்குமார் ஆகியோர் மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருவது வரவேற்கத்தக்கது.
ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்து மக்களின் வாக்குரிமையை திருடுவதை பாஜக செய்கிறது. ஆதாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ள நிலையில் ஜனநாயகத்தின் அனைத்து சக்திகளும் ஒன்று சேர்ந்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நிலையில், பாஜகவுடன் சேர்ந்து அதிமுக கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மௌனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது.
பாஜகவிற்கு துணை போகும் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார். தமிழக மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.