#EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் இன்று (அக். 23) அதிகாலை முதல் சோதனை நடந்து வருகிறது.
இதேபோல், சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் வைத்திலிங்கத்தின் அறையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விடுதி நிர்வாகத்திடம் சாவி வாங்கி சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான பிற இடங்களிலும் அதிரடி சோதனை நடந்து வருகிறது.
2011-16 காலத்தில் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.