“இந்தி எதிர்ப்பு எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிக்கின்றன” - திருவள்ளூரில் சீமான் பரப்புரை!
இந்தியை எதிர்க்கிறோம் எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெகதீஸ் சந்தரை ஆதரித்து ஒலிவாங்கி (மைக்) சின்னத்திற்கு வாக்கு சேகரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சீமான் பேசியதாவது,
“100 நாள் வேலை திட்டம் மூலம் எத்தனை மரங்களை நட்டு வைக்கப்பட்டது. எத்தனை ஏரி குளங்களை தூர்வாரப்பட்டது. இதனால் விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. வேளை செய்யாமல் இருப்பதற்கு பணம் கொடுக்கிறார்கள். பீகார், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் அனைத்து வேலைகளிலும் சேர்ந்து விட்டனர். அனைத்து இடங்களிலும் இந்தி, தங்கிலீஷ் தான் உள்ளது. தமிழில் பெயர்கள் கூட இல்லை.
இதை மாற்றுவதற்காக தான் துடிக்கிறேன். வட இந்தியர்களுக்கு இங்கு வாக்குரிமை கொடுத்தால் வட இந்தியன் தான் ஆட்சியை தீர்மானிப்பான். இந்தியை எதிர்க்கிறோம் என கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிக்கின்றனர். வடஇந்தியர் உன் இடத்தை ஆக்கிரமித்து விரட்டுவான். உரிமைகளை போராடித்தான் பெற வேண்டும். அதற்கான போர் தான் இது. தனியார் பள்ளி, தனியார் மருத்துவமனை என்றால் அரசு எதற்கு? சாராயக்கடை நடத்துவது தான் அரசா? அதற்குத்தான் ஓட்டு போடுகிறோமா?
இந்தியா மூன்று இந்தியாவாக உள்ளது. மழை நீரை வெளியேற்றவும் வழியில்லை, சேமிக்கவும் வழியில்லை. பரந்தூரில் 5000 ஏக்கர் விமான நிலையம் எதற்கு? சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லாத நிலையில் ஒரு நாட்டிற்கு எதற்கு விமான நிலையம். அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் எதற்கு? துறைமுகத்தை உருவாக்க வேண்டும் என்று கன்னியாகுமரியில் இருந்து 80 லட்சம் டன் மலை கற்களை கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.கேரளாவில் மலையை வெட்ட தடை விதித்ததால், கன்னியாகுமரியில் இருந்து கற்களைக் கொண்டு வந்து கொட்டியுள்ளனர். மலையை மாயாஜாலத்தில் வர வைக்க முடியுமா? மலையை அழிக்கும் உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது. எல்லா துன்பங்களையும் திறக்கும் சாவி ஆட்சி அதிகாரம் தான். இதனை புரிந்து கொள்ளுங்கள்”
இவ்வாறு சீமான் பேசினார்.