UPSC சிவில் சர்வீசஸ் இறுதி முடிவுகள் - நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்றவர் இந்திய அளவில் 23வது இடம்பிடித்து சாதனை!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய வெளியுறவு சேவை (IFS), இந்திய காவல் சேவை (IPS) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதற்கட்டத் தேர்வு , முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளில் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் ஒதுக்கப்படுகின்றன.
UPSC சிவில் சர்வீசஸ் முதற்கட்டத் தேர்வு 2024 ஜூன் 16 அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2024 செப்டம்பர் 20 முதல் 29ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. இறுதி கட்டமான நேர்காணல் சுற்று ஜனவரி 7 முதல் ஏப்ரல் 17, 2025 வரை நடைபெற்றது.
இந்த நிலையில் UPSC சிவில் சர்வீசஸூக்கான இறுதி முடிவுகள் வெளியாகிவுள்ளது. இந்திய அளவில சக்தி துபே என்பவர் முதல் இடத்தை பெற்றுள்ளார். அவருக்கடுத்து ஹர்ஷிதா கோயல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். டோங்ரே அர்ச்சித் பராக் என்பவர் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
இதில் நான் முதல்வன் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன் UPSC தேர்வில் தமிழ்நாட்டில் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் 23ம் இடம் பெற்றுள்ளார். இதேபோல் நான்முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மோனிகா 39-வது இடத்தை பெற்றுள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 134 பேர் பயிற்சி பெற்ற நிலையில், 50 பேர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி. தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய 2 பேர் தேர்ச்சி. தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 பேர் நான் முதல்வன் திட்டத்தில் முழு நேர உரைவிட பயிற்சி மேற்கொண்டனர். UPSC சிவில் சர்வீசஸ் இறுதி முடிவுகளை https://upsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.