For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை நடைபெறும் என்பது சந்தேகம்!” - அன்புமணி ராமதாஸ் பேட்டி!

05:04 PM Jul 09, 2024 IST | Web Editor
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை நடைபெறும் என்பது சந்தேகம் ”   அன்புமணி ராமதாஸ் பேட்டி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்வார்களா? என சந்தேகமாக இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு சென்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அங்கிருந்த ஆம்ஸ்ட்ராங் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“ஆம்ஸ்ட்ராங் மறைந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும். அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து ஆட்சிக்கு வரவேண்டும் என 20 ஆண்டுகளாக ஆம்ஸ்ட்ராங் சொல்லி வருகிறார். அவருடைய மறைவு தமிழ்நாட்டில் உள்ள சமூக நீதிக்கு மிகப்பெரிய பின்னடைவு என நினைக்கிறேன். அவருடைய கனவு அடித்தளத்தில் உள்ள மக்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே.

தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன, அவை பட்டியல் இன சமுதாய கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி என்று அவர் பல முறை சொல்லி இருக்கிறார். உண்மையான சமூக நீதிக்காக நிச்சயமாக அனைவரும் பாடுபடுவோம். அவருடைய கொலை எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும். முழுமையான விசாரணை மேற்கொள்வார்களா? என எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அறுக்க வேண்டும். அப்படி ஒழித்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும், கொலை செய்தவர்களுக்கு தூக்கு அளிக்க வேண்டும். சேலத்தில் அதிமுக நிர்வாகி, கடலூரில் பாமக நிர்வாகி என தொடர்ந்து பல பேர் வெட்டப்படுகிறார்கள். காவல்துறை முதலமைச்சருக்கு கீழ் உள்ள பிரிவு. பொதுமக்கள் இன்று பீதியில் உள்ளார்கள். அதனை போக்க வேண்டும்.

20 நாட்களாக தமிழக உளவுத்துறை விக்கிரவாண்டி தொகுதியில் இருக்கிறார்கள். பெரிய தலைவருக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. ஸ்காட்லாந்துக்கு நிகரான நம் காவல் துறையை சுதந்திரமாக வேலை செய்ய விட வேண்டும். திருமாவளவன் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறுகிறார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ வேண்டாம் என்று கூறுகிறார். அவர் இங்கு ஒரு பதில், அங்கு ஒரு பதில் பேசுகிறார்.

அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய போதை பொருட்கள் எல்லாம் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. விக்கிரவாண்டியில் 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து அதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை மூடி மறைத்து வருகிறார்கள். எனக்கும் பல அச்சுறுத்தல்கள் இருக்கிறது. ஆனால் காவல்துறை எனக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். தமிழக மக்கள் பயம் இல்லாமல் வாழ வேண்டும். முதலமைச்சர் இன்று நேரில் வந்து பார்த்து, உத்தரவாதம் அளித்ததை வரவேற்கிறோம்”

என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement