"கால்குலேட்டரையே மலைக்க வைக்கும் திமுகவின் நான்கரை ஆண்டுகால ஊழல்" - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் 7.5% முதல் 10% வரை தனது உறவினர்கள் வாயிலாக லஞ்சம் பெற்று திமுக அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ரூ.1,020 கோடி ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை புகார் அளித்திருக்கிறது.
இதே துறையில் பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ள செய்தி வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே, ஒப்பந்தம் வழங்குவதிலும் முறைகேடு நடந்துள்ள செய்தி வந்துள்ளது. ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறை மாறிப்போனதை வெளிப்படுத்துகிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,908 கோடி ஊழல், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரூ.160 கோடி ஊழல், தோட்டக்கலைத் துறையில் ரூ.141 கோடி ஊழல், சென்னை மாநகராட்சியில் கழிவறை பராமரிப்பில் ரூ.364 கோடி ஊழல் என நான்கரை ஆண்டுகளில் அறிவாலயம் அரசு புரிந்த ஊழல்களை எல்லாம் மொத்தமாகக் கணக்கிட்டால் கால்குலேட்டருக்கே கண்ணீர் வந்துவிடும்!
இப்படி மக்களின் வரிப்பணத்தை நான்கரை ஆண்டுகளாக நாலாப்பக்கமும் சுரண்டித் தின்று, ஊழல் உடன்பிறப்புகளை ஒய்யாரமாக உலவவிடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.