திமுகவின் பரப்புரை இந்தியாவின் வடக்கிலும் எதிரொலிக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் திமுக தேர்தல் பரப்புரை, வடக்கிலும் எதிரொலிக்கும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மற்றொருபுறம் தேர்தல் பிரசார பணிகளை தொடங்குவதுடன், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் வரும் 19-ம் தேதியில் இருந்து விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் எனவும், மார்ச் 1 முதல் மார்ச் 7-ம் தேதிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று தேர்தல் பிரச்சார கூட்டங்கள் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகள் தவிர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெற்றது. இவை மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. நேற்றைய தினம் திருப்பெரும்புதூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, நாமக்கல், திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும்!
பாசிசம் வீழும்! #INDIA வெல்லும்! @arivalayam @dmkitwing pic.twitter.com/KSJ6Dms6sy
— M.K.Stalin (@mkstalin) February 17, 2024