ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் : தமிழ்நாடு அரசு, காவல்துறை பதிலளிக்க உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறை, ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்த அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கோயம்புத்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் குஷ்பு , சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது.
ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு சென்னையில், எந்த ஆர்ப்பாட்டமும், போராட்டமும் , ஊர்வலமும் நடத்தக்கூடாது என காவல்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், ஜனவரி 7ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினருக்கு எதிராக
காவல்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படுவதன் மூலம் காவல்துறை ஒருதலைபட்சமாகவே செயல்பட்டுள்ளது.
போராட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சென்னை நகர போலீஸ் சட்ட விதியை மீறி செயல்பட்ட சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் தமிழக அரசு, காவல்துறை ஆகியோர் 4 வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை தள்ளி வைத்தார்.