”அரசியல் சாசன சட்டத்தைப் புதைத்துவிட்டு செயல்படுகிறது திமுக” - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு...!
அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திமுக ஆட்சியில், ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா? காவல் துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாரும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதையும்; பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாக 'Compromise செய்திருப்பதையும் பார்க்கும்போது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது. 'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்' என்று கூறிய ஸ்டாலினின் திமுக ஆட்சி, 'சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில், தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது'.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை மருந்து புழக்கம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட அனைத்துக் குற்ற நிகழ்வுகளிலும், குற்றவாளிகளுடன் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைகோர்த்து இருப்பதும், அவர்களைக் காப்பாற்றும் பணியில் காவல் துறை சட்டப்படி செயல்படாத நிலை மற்றும் இந்த ஆட்சியின் அவலங்களை தைரியமாக எடுத்துரைக்கும் சமூக ஊடகங்களை முடக்குவது மற்றும் சட்ட விரோத என்கவுண்டர்களில் ஈடுபடுவதும்தான் திமுக ஆட்சியின் சாதனை. மேலும், தங்களது குற்றங்களில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகளைக் காப்பாற்ற CBI விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடும் இந்த திமுக அரசு, கிட்னி மாற்று முறைகேடு மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல், அவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர்களை வைத்து முறையாக வாதிடாததால், தவறிழைத்த மருத்துவமனை மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றது.
வட மாநிலங்களில் குழந்தைகளின் உயிரைக் குடித்த நச்சு இருமல் மருந்து தயாரித்த நிறுவன உரிமையாளரை மத்திய பிரதேச காவல்துறை கைது செய்யும் வரை செயலற்றிருந்த தமிழகக் காவல்துறை.
திமுக ஆட்சியில் நிரந்தர DGP இருந்தபோதே காவல்துறை சிறப்பாக செயல்படாத நிலையில், தற்போது காவல் துறையின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குறியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் DGP பதவி காலியானவுடன் தகுதியான காவல் உயர் அதிகாரிகள் பலர் இருக்கும் நிலையில், வேண்டுமென்றே DGP நியமனத்தை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு, தற்காலிக DGP-யை நியமித்துள்ளார் முதலமைச்சர். தமிழகத்தில் DGP நியமிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்தும், இன்றுவரை இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத திமுக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி 7.11.2025-அன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் இந்த வழக்கில் 3 வார காலத்தில் பதில் அளிக்க தமிழ் நாடு அரசுக்குநோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தோல்வி. அரசியல் சாசன சட்டப்படி மக்களைக் காப்பதாக உறுதிமொழி ஏற்று ஆட்சியமைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் சுயநலத்திற்காக ஆட்சி நடத்துகிறார். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் வகையில், காவல் துறை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்துவதோடு, மத்திய தேர்வாணைய விதிகளின்படி, அவர்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை தலைமை DGP-ஆக உடனடியாக நியமனம் செய்ய வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.