”திமுக அரசு வரி மேல் வரி போட்டு மக்கள் தலையில் வலியை சுமத்துகிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் 4ஆம் கட்டமாக மதுரையில் நேற்று முதல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர்,
“திமுக அரசு பல்வேறு துரோகங்களை செய்து வருகின்றது. திமுக அரசு டங்ஸ்டன் பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை. அவர்கள் வீடு பிரச்சனை மட்டும் தான் அவர்களுக்கு தெரியும். அதிமுக ஆட்சியில் அனைத்து அணைகளையும் தூர்வாரப்படும். முக்கியமாக வைகை அணை தூர்வாரப்படும். மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.எங்கே பார்த்தாலும் கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளது. போதை பொருள்களை அதிமாக விற்பனை செய்வது திமுக அரசு தான்.
அதிமுக அரசு ஒரே ஆட்சியாண்டில் இரண்டு முறை விவசாய கடன் தள்ளுபடி செய்தது. மேலும் 2017ஆம் ஆண்டு வறட்சியில் பதிப்படைந்த விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்தது அதிமுக அரசு. ஏழை மக்களுக்காக அதிமுக அரசு கொண்டு வந்த அம்மா மினி கிளீனிக் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்தது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தாலிக்கு தங்கம் என்கின்ற திட்டம் தொடரும். மணமகன் மற்றும் மணமகளுக்கு பட்டு சேலை பட்டு வேஷ்டி சட்டை வழங்கப்படும். மீண்டும் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
திமுக அரசு வரி மேல் வரி போட்டு மக்கள் தலையில் வலியை சுமத்துகிறது. அதிமுக அரசு 52 லட்சத்து 36 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கியது. ஏழை மாணவர்களுக்காக திமுக அரசு என்ன செய்தது” என்று பேசி முடித்தார்.