"பெண்களுக்கு பாதுகாப்பளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது" - அண்ணாமலை குற்றச்சாட்டு!
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.
இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.