மல்லிகார்ஜுன கார்கேவை இருக்கையில் இருந்து ராகுல் காந்தி எழ வைத்தாரா? - வைரலாகும் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘India Today’
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது இருக்கையில் இருந்து எழ வைத்து ராகுல் காந்தி உட்கார்ந்தார் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. 23 வினாடி காட்சிகளில், சோனியா காந்திக்கு அருகில் அமர்ந்திருக்கும் மல்லிகார்ஜுன் கார்கே, எழுந்து நாற்காலிகளுக்குப் பின்னால் நடப்பார். கார்கே எழுந்ததும், ராகுல் காந்தி அருகில் வந்து நாற்காலியை நகர்த்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
காங்கிரஸ் தேசியத் தலைவருக்கு நடந்த மோசமான அனுபவத்தை பாருங்கள்? அருகில் வேறு நாற்காலிகள் உள்ளன, ஆனால், அப்பாவை விட வயதில் மூத்தவரை எழ வைத்துவிட்டு ராகுல் காந்தி காந்தி அமர்கிறார். அந்த அவமானப்பட்ட முதியவர் அருகில் வேறு நாற்காலிகள் இருந்தாலும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டதை கவனித்தீர்களா? என குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்தியா டுடே நடத்திய விசாரணையில், வைரலாக பரவும் பதிவுகள் தவறானவை என்று கண்டறியப்பட்டது. கார்கே தனது இருக்கையை விட்டு எழுந்து வெளியேறவில்லை மாறாக புதிய காங்கிரஸ் தலைமையக திறப்பு விழாவில் வரவேற்பு உரை நிகழ்த்த எழுந்தார் என்பது கண்டறியப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு :
வைரலான வீடியோவின் கீஃப்ரேம்களை எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தியபோது இதேபோன்ற பின்னணி படம் ஊடகங்களில் பகிரப்பட்டது தெரியவந்தது. காங்கிரஸின் புதிய தலைமையகமான இந்திரா பவன் திறப்பு விழாவின் காட்சி இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி கோட்லா சாலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமைச் செயலகத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஜனவரி 15ஆம் தேதி திறந்து வைத்தார் .
இந்தக் குறிப்பைப் பயன்படுத்தி மேலும் தேடியதில் இந்திரா பவன் திறப்பு விழாவின் நீண்ட வீடியோக்கள் கிடைத்தன. நியூஸ் 9 நேரலையில் பகிர்ந்த நேரடி வீடியோவை மதிப்பாய்வு செய்து வைரல் இடுகையில் பயன்படுத்தப்பட்ட கிளிப்பைக் கண்டறிந்தது. சம்பிரதாயமான தொடக்க விழா முடிந்ததும், மாநாட்டு அரங்கில் முதலில் ராகுல் காந்தி பேசுவார். அதன்பிறகு அக் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அப்போதுதான் அவர் நாற்காலியில் இருந்து எழுகிறார். அப்போது கார்கே தனது இருக்கையில் இருந்து எழுந்திருக்க ராகுல் காந்தி உதவுகிறார். இதனைத் தொடர்ந்து கார்கே மேடைக்கு சென்று பேசினார். வீடியோவின் தொடர்புடைய பகுதி கீழே உள்ளது.
சுமார் 15 நிமிடங்கள் பார்வையாளர்களிடம் கார்கே உரையாற்றுகிறார். அவர் முதலில் அமர்ந்திருந்த இடத்திற்கு (சோனியா காந்திக்கு அடுத்த நாற்காலியில்) திரும்புவதையும் இதேபோன்ற வீடியோ இந்திய தேசிய காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவிலும் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கே.சி.வேணுகோபால் இடையே ராகுல் காந்தி அமர்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு :
ராகுல் காந்தியின் செயலால் மல்லிகார்ஜுன கார்கே அவமானப்பட்டு மேடையை விட்டு வெளியேறினார் என வைரலாக வீடியோ பரவுகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ததில் மல்லிகார்ஜுன கார்கே நாற்காலியில் எழுந்திருக்க ராகுல் காந்தி உதவினார் என்பது தெளிவாகிறது. இவைதான் தவறான கூற்றுடன் பகிரப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.