This News Fact Checked by ‘PTI’
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடுவதைக் காட்டுவதாகக் கூறும் ஒரு வீடியோவை பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்துள்ளனர். பிடிஐ உண்மை சரிபார்ப்பு டெஸ்கின் விசாரணையில், இந்த வைரல் வீடியோ ஜனவரி 2025 ஆம் ஆண்டு கட்சியின் சார்பில் தேர்தலுக்கான தீம் பாடலை வெளியிடும் வீடியோ என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தவறான கூற்றுடன் பகிரப்பட்டது.

பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 48 இடங்களைப் பெற்று பாஜக மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது, 27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மீதமுள்ள 22 இடங்களை ஆம் ஆத்மி கட்சி வென்ற நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.
தர்செம் லால் என்ற எக்ஸ் பயனர் பிப்ரவரி 8 அன்று ஒரு வீடியோவைப் பகிர்ந்து டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடியதாக எழுதினார். இந்தி மொழியில் எழுதப்பட்ட இந்தப் பதிவின் தலைப்பு: “டெல்லியில் பாஜகவின் வெற்றி குறித்து #இந்தியா கூட்டணித் தலைவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் பாடல் பாடி நடனம் ஆடுகின்றனர். கெஜ்ரிவால் அவர்களே இந்த பதிவை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். பாஜகவும் காங்கிரசும் ஒன்றாக இருப்பதாக நாங்கள் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறோம்.” என எழுதியிருந்தார்.
உண்மை சரிபார்ப்பு :
வைரலான பதிவு குறித்து PTI Desk, InVid Tool Search மூலம் வீடியோவை இயக்கி, சில கீஃப்ரேம்களைக் கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களில் ஒன்றை இயக்கியபோது, அதே வீடியோவை இதே கூற்றைக் கொண்ட பல பயனர்கள் பகிர்ந்துள்ளதைக் கண்டறிந்தோம். இதுபோன்ற இரண்டு இடுகைகளை இங்கேயும் இங்கேயும் காணலாம் ,
மேலும் அவற்றின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளை முறையே
இங்கேயும் இங்கேயும் பார்க்கலாம்.

கூகுள் தேடல் முடிவுகளை மேலும் ஆராய்ந்தபோது, ஜனவரி 23, 2025 தேதியிட்ட இந்தியா டுடேவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோ அறிக்கையை டெஸ்க் கண்டது. அந்த பதிவின் தலைப்பு: “வரவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் '#DelhiCongressAnthem' என்ற தீம் பாடலை வெளியிடுகிறது.” என இடம்பெற்றிருந்தது.
அறிக்கைக்கான இணைப்பு இங்கே மற்றும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது. விசாரணையின் அடுத்த பகுதியில், ஜனவரி 23, 2025 தேதியிட்ட ஆஜ் தக்கின் மற்றொரு அறிக்கையை டெஸ்க் கண்டறிந்தது, அதன் தலைப்பு, "டெல்லியில் காங்கிரஸின் தீம் பாடலுக்கு தலைவர்கள் நடனமாடினர், வீடியோவைப் பார்க்கவும்" என இடம்பெற்றிருந்தது. அந்த செய்தி அறிக்கைக்கான இணைப்பு மற்றும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
வைரல் காணொளிக்கும் செய்தி அறிக்கைக்கும் இடையிலான ஒற்றுமைகளை எடுத்துக்காட்டும் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஜனவரி 23 அன்று நியூஸ் 24 தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவேற்றிய ஒரு காணொளியின் தலைப்பு "டெல்லி காங்கிரஸ் தேர்தலுக்கான தீம் பாடலை அறிமுகப்படுத்தியது அதற்கு தலைவர்கள் நடனமாடினர்" என குறிப்பிட்டுருந்தனர். இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அதே காணொலியாகும். X பதிவிற்கான
இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வைரலான காணொளி டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்று டெஸ்க் முடிவு செய்தது. தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியின் கருப்பொருளை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட தீம் பாடலின் வெளியீட்டைக் கொண்டாடுவதை இது காட்டுகிறது.
முடிவுரை:
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் ஒரு வைரலானது. இதுகுறித்து பிடிஐ டெஸ்க் தனது விசாரணையில், இந்த வைரல் வீடியோ 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ் கட்சியின் கருப்பொருளை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட தீம் பாடலின் வெளியீட்டைக் கொண்டாடும் வீடியோ என கண்டறிந்துள்ளது. இந்த வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் தவறான கூற்றுடன் பகிரப்பட்டது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.