"பசும்பொன்னில் திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள்" - ஆர்.பி.உதயகுமார்!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "அதிமுகவில் பல தலைமுறைகளாக உண்மையாக உழைப்பவர்களிடம் எந்த குழப்பமும் இல்லை. யாருடைய உழைப்பையும், செல்வாக்கையும் குறைத்து சொல்லவில்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என வாய் கூசாமல் ஓபிஎஸ் கூறிய போதே தொண்டர்கள் இதயம் சிதைந்து போனது. முதலமைச்சர் ஸ்டாலினை வீட்டுக்கே சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஓபிஎஸ்.
அதிமுக தொண்டர்களின் வேதனைகளை ஓபிஎஸ் புரிந்து கொள்ளவில்லை. திமுகவின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து கொண்டிருக்கிறார் அம்மாவின் விசுவாசி ஓபிஎஸ். ஜெயலலிதா இன்று இல்லை என்பதற்காக எதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் வெறுப்பார்களோ அதையெல்லாம் எந்த கூச்சமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்.
இவர்களுக்கு அதிகாரம், பதவி இல்லை. ஜெயலலிதா கொடுத்த அடையாளத்தை இழந்து வீதியில் இருக்கிறார்கள். முகவரி கொடுத்த இயக்கத்தை சிதைக்க வியூகம் அமைக்கிறார்கள். பசும்பொன்னில் திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி ஒரு கருப்பு வரலாறை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த நாடகத்திற்கு திரைக்கதை எழுதிய செங்கோட்டையன் இன்று ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார். திமுகவின் பி டீமாக, பசு தோல் போர்த்திய புலியாக இருப்பவர்களை தொண்டர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். எத்தனை பூஜ்யங்கள் ஒன்று சேர்ந்தாலும் ஜெயலலிதாவின் ராஜ்யம் அமைவதை தடுக்க முடியாது. துரோக நாடகத்தின் வசனங்கள் மாறலாம். ஆனால் உண்மை சுடத்தான் செய்யும்.
திமுக ஆட்சிக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்து விட்டு அம்மாவின் ஆட்சி அமைப்பதாக கூறி தொண்டர்களை வீதியில் நிறுத்த முயல்கிறார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் இவர்கள் ஆடிய ஆட்டமும், இன்று நடத்தும் நாடகமும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது" என்று தெரிவித்துள்ளார்.