மக்களவைத் தேர்தலில் 4 பேர் ஒரே மாதிரியாக 19,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியா? உண்மை என்ன?
This news fact checked by PTI News
மக்களவை தேர்தலில் பாஜகவை சேர்ந்த நவநீத் ராணா, அஜய் தேனி, மாதவி லதா மற்றும் காங்கிரஸின் கன்னையா குமார் உள்ளிட்ட 4 வேட்பாளர்களும் அவரவர்கள் தொகுதிகளில் சரியாக 19,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக வைரலாகி வரும் பதிவு போலியானது என கண்டறியப்பட்டது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. கடந்த ஜூன் 4-ம் தேதி அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும், என்டிஏ கூட்டணி 293 தொகுதிகளையும் கைப்பற்றின.
இதில், பாஜகவை சேர்ந்த நவநீத் ராணா, அஜய் தேனி, மாதவி லதா மற்றும் காங்கிரஸின் கன்னையா குமார் உள்ளிட்ட 4 வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் சரியாக 19,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக பல சமூக ஊடக பயனர்கள் ஹிந்தி நாளிதழின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளனர்.
உண்மை சரிபார்ப்பு:
ஃபேஸ்புக் பயனர் ஒருவர் ஜூன் 5-ம் தேதி இந்தி செய்தித்தாள் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வைரலான புகைப்படத்தை பகிர்ந்து, அதன் தலைப்பில்,
“மக்கள் செய்தித்தாளை கவனமாக படிக்க வேண்டும்‼️ இதில் நான்கு வேட்பாளர்கள் வெற்றியும் தோல்வியும் ஒரே எண்ணிக்கையில்தான். 19731-ன் புள்ளிவிவரம் என்ன சொல்கிறது? இது தற்செயலானதா அல்லது பரிசோதனையா? இவிஎம்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் நிலைநிறுத்த, இதுபோன்ற முடிவுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இவிஎம்களில் சில மையம்! அதனால்தான் EVMகள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன்!” என குறிப்பிடப்பட்டிருந்தது.
பல பயனர்கள் வைரலான இந்த ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து, தவறான தரவைக் காட்டியதாகக் குறிப்பிடுவது கண்டறியப்பட்டது. அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் கெரியில் சமாஜ்வாதி கட்சியின் உட்கர்ஷ் வர்மாவை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் அஜய் தேனி 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதே போல், ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) எம்.பி., அசாதுதீன் ஓவைசிக்கு எதிராக போட்டியிட்ட ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா 3.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் கண்டறியப்பட்டது. மேலும், காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரை பாஜகவின் மனோஜ் திவாரி 1.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பதும் கண்டறியப்பட்டது.
பின்னர், வைரலான ஸ்கிரீன் ஷாட் போலியானது என்றும், சமூக ஊடக இடுகைகளில் ஸ்கிரீன்ஷாட்டுடன் பகிரப்பட்ட கூற்று தவறானது என்று உறுதியானது. தவறான புள்ளிவிவரங்களுடன் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட செய்தித்தாள் கிளிப்பிங் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
முடிவு:
மக்களவை தேர்தலில் பாஜகவின் நவ்நீத் ராணா, அஜய் தேனி, மாதவி லதா மற்றும் காங்கிரஸின் கன்னையா குமார் ஆகிய நான்கு வேட்பாளர்கள் 19,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக வைரலாகிவரும் பதிவு, டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு தவறான கூற்றுடன் பகிரப்பட்டது என உறுதியானது.
Note : This story was originally published by PTI News and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.