தெலங்கானா காங்கிரஸ் மாநிலத் தலைவரை சந்தித்த டிஜிபி அஞ்சனி குமார் பணியிடை நீக்கம்! தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி தேர்தலில் போட்டியிடும் தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த காவல்துறை தலைவர் அஞ்சனி குமாரை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (டிச. 3) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கா் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலையில் இருந்து வருகின்றன. மும்முனைப் போட்டி நிலவிய தென் மாநிலமான தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்)கட்சியை அகற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி அரியணையில் ஏறுகிறது.
இந்த நிலையில், தெலங்கானாவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, தெலங்கானா காவல்துறைத் தலைவர் அஞ்சனி குமார் மற்றும் மாநில காவல்துறை அதிகாரி சஞ்சய் ஜெயின் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்ட தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனார். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டிஜிபி அஞ்சனி குமாமருடன் ரேவந்த் ரெட்டியை சந்திக்க சென்ற மேலும் 2 காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது, தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.