கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை | விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு!
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.,27) புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு – இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,சென்னை விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்பணிகளை ஆய்வு செய்தார்.
இதையும் படியுங்கள் : நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை… அதிகபட்சமாக மழை பதிவு எங்கே?
அப்போது விருகம்பாக்கம் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, அண்ணாநகர் ஓட்டேரி நல்லா கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை வியாசர்பாடி - புளியந்தோப்பு பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.