Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை!” எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த பதிலால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

01:43 PM Nov 26, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்றத்தில் எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் அளித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த 2020-ஆம் ஆண்டு தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் 2020 இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி இம்மாவட்டங்களில் 2016-க்கு முன் அனுமதி பெற்ற ஹைட்ரோகார்பன் கிணறுகள் தவிர்த்து காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளைத் திறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு ஓ.என்.ஜி.சி நிறுவன பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் எடுக்கும் பணியால் விவசாய நிலங்கள் மோசமான நிலைக்கு சென்றதுடன், நிலத்தடி நீர் மாசுபட்டதாக விவசாயிகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடினார்கள். ஹைட்ரோகார்பன் எடுக்க தடைகோரி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை தொடர்ந்து அப்போது டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதனை மக்களும் வரவேற்றனர்.

இந்நிலையில் மக்களவையில் நேற்று மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளித்துள்ளது. இந்த பதிலின்படி, 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில், மத்திய அரசுக்கு அந்த முன்மொழிவு அனுப்பப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்தவொரு பரிந்துரையும் பெறவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டள்ளது. அதேநேரம் கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என்றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 3 திட்டங்களின் கால அளவை மட்டும் நீட்டித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதேபோல் கடலூர், விழுப்புரம், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை மத்திய அரசால் அறிவிக்க முடியும் என்கிற நிலையில்,. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Agricultural ZoneCentral governmentCongressDeltaMayiladuthuraiMember of Parliamentnews7 tamilProposalsudhatamilnadu government
Advertisement
Next Article