டெல்லி விசிட்: “2026-ல் திமுகவை வீழ்த்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்” - நயினார் நாகேந்திரனுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
தமிழ்நாடு பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்தார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்தார்.
பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது தமிழ்நாடு அரசியல் சூழல், பாஜக – அதிமுக கூட்டணி விவகாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் எனவும், தி.மு.க.வை வீழ்த்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவது தொடர்பாகவும் நயினார் நாகேந்திரனிடம் ஆலோசித்துள்ளார்.
வரும் காலங்களில் அதிக முறை தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் மோடி தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கூறியதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின் போது, அ.தி.மு.க இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், டி.டி.வி தினகரன் கூட்டணியில் இடம்பெற உள்ள நிலையில், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டில் எளிதில் வெற்றி பெறலாம் என உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளார்.