டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு - அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் சம்மன்!
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ துர்கேஷ் பதக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை அடுத்து திஹார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் வீடு, ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என 12 இடங்களில் கடந்த 06.05.2024-அன்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரையும், ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக்கையும் இன்று (08.04.2024) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மதுபான கொள்கை தொடர்பாக ஆம் ஆத்மியை சேர்ந்த மேலும் நான்கு பேரை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக அக்கட்சியை சேர்ந்த அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது பிபவ் குமாருக்கும், துர்கேஷ் பதக்கிற்கும் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சில விளக்கங்கள் பெற பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரையும், ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக்கும் சிறிது நேரத்தில் விசாரணைக்கு ஆஜராவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.