டெல்லி தேர்தல் - பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பிரச்சாரகர்களாக அறிவிப்பு!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப். 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கும் 40 நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அக்கட்சியின் ஏழு முதலமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் பட்டியலில் போஜ்புரி நட்சத்திரங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோஜ் திவாரி, ரவி கிஷண் உள்ளிட்ட பூர்வாஞ்சலி தலைவர்கள், தினேஷ் லால் யாதவ் நிராஹுவா உள்ளனர்.
கிழக்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக அறியப்படும் பிகாரைச் சேர்ந்த பூர்வாஞ்சலிகள் தலைநகரில் கணிசமான வாக்கு வங்கியாக உள்ளனர். அதனால், அவர்களை ஈர்க்கும் வகையில் பிரசாரத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நட்சத்திர பிரச்சாரகர்களாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சௌகான், மனோகர் லால் கட்டார், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் புரி, கிரிராஜ் சிங் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இதேபோல், முதலமைச்சர்கள் வரிசையில் தேவேந்திர ஃபட்னவீஸ், ஹிமந்தா பிஸ்வா சர்மா, புஷ்கர் சிங் தாமி, யோகி ஆதித்யநாத், பஜன் லால் சர்மா, நாயப் சிங் சைனி, மோகன் யாதவ் ஆகியோர் நட்சத்திரப் பிரச்சாரகர்களாக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளனர்.
இந்தப் பட்டியலில் டெல்லியில் உள்ள பாஜகவின் ஏழு எம்.பி.க்களும் இடம் பெற்றுள்ளனர். டெல்லி பாஜக பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, இணைப் பொறுப்பாளர் அல்கா குர்ஜார், கட்சியின் மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோரும் நட்சத்திரப் பிரச்சாரகர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.