டெல்லி சட்டசபை தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம் !
டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். தலைநகர் என்பதால் டெல்லியில் ஆட்சியை பிடிக்க ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் மொத்தம் 699 பேர் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் முதல்வரும், ஆளும் ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் அதிகபட்சமாக 23 பேர் போட்டியில் உள்ளனர். இந்நிலையில் பரபரப்பாக நடந்து வரும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் இறுதிகட்ட பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன.
பிரதமர் மோடி ஆர்கே நகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாடினார். மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த 2 சட்டப்பேரவை தேர்தல்களில் பின்னடைவுகளைச் சந்தித்தது. கடந்த 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும். அதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது. அதேபோல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்யும் வகையில், பதற்றமான வாக்குச்சாவடிகள், டெல்லியின் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.