டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் - முந்தும் பாஜக.. ஆம் ஆத்மிக்கு பின்னடைவு!
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரிவிந்த கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஓட்டுப்பதிவின் போது 13,767 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் 70 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மேலும், 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக 19 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை, வாக்கு எண்ணும் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 5 ஆயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், காலை 9 மணி நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜக 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும், ஆம் ஆத்மி 25 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது.