சுனிதா கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சுனிதா கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்தினர்.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, கடந்த மார்ச் 21-ம் தேதி ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளன. மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் புதிய நெருக்கடிகளை சந்திப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன.
இதனிடையே நேற்று முன்தினம் (மார்ச் 31) இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன், அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட அமலாக்கத்துறை காவல் நேற்றுடன் (ஏப். 1) நிறைவடைந்த நிலையில், அவருக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பதவியில் இருக்கும் முதலமைச்சர் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல்முறை. முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்றும், சிறையில் இருந்த படியே பணிகளை செய்வேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் அவமதிப்பதாகவும், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கெஜ்ரிவாலின் இல்லத்தில் அவரது மனைவி சுனிதாவுடன் அமைச்சர்களும், ஆம்ஆத்மி எம்எல்ஏக்களும் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனால், கெஜ்ரிவால் ராஜிநாமா செய்து அவர் மனைவி சுனிதா முதலமைச்சராக பதவியேற்பாரா? அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படுமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.