ஆர்.என்.ரவி மீதான விமர்சனம் - திமுக பிரமுகர் ராஜன் குறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள்!
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது 'X' சமூக வலைதள பக்கத்தில், நாகர்கோவில் திமுக பிரமுகர் ராஜன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது விமர்சனம் வைத்ததாகக் கூறப்படும் ராஜன், சில சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னணியில் திமுக அரசு செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
"சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்து, அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடும்போதும் கண்டுகொள்ளாமல், அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே குறியாக இருப்பது திமுக கட்சியின் வரலாறு" என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது திமுக அரசின் மீது நேரடியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகும்.நாகர்கோவில் திமுக மாநகர இணைச் செயலாளரான ராஜன், 'கோழி ராஜன்' என அழைக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். நாகர்கோவிலில் உள்ள புகழ்பெற்ற சவேரியார் கோவிலுக்கு அரசு ஒதுக்கிய ₹1.14 கோடி நிதியை ராஜன் சுருட்டி விட்டதாகவும், அந்தப் பணத்தில் பல சொத்துக்களையும், தனது மனைவி பெயரில் இன்னோவா காரையும் வாங்கியுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிதி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியும், அதற்குப் பதிலளிக்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ராஜன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் அளிக்கப்பட்ட புகார் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
பொதுமக்கள் அளித்த புகாரைத் திசைதிருப்ப, ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் ராஜன் நாடகமாடியுள்ளார் என்றும் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ராஜன் மீது கொலை மிரட்டல் விடுப்பது, பள்ளி அருகே குடித்துவிட்டு கூச்சலிடுவது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கான கணக்கினை ஏன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க மறுக்கிறார்கள்?பொதுமக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும்படி நடக்கும் ராஜன் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல்துறை ஏன் தயங்குகிறது? அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுகள், அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.