"சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல்" - திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு!
சவுக்கு சங்கருக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கியும் கோவை சிறையில் அடைக்கவும் திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரெட் பிக்ஸ் என்ற பெயரில் டிஜிட்டல் ஊடக நிறுவனம் நடத்தி வரும் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது youtube பக்கத்தில் வெளியிட்டார்.
அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில், அது எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவையில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக சவுக்கு சங்கரை திருச்சி அழைத்து வந்த நிலையில், நேற்று சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தனர்.
திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில், சவுக்கு சங்கர் ஆஜர்ப்படுத்தப்பட்டர். அப்போது ஆஜரான சவுக்கு சங்கரிடம் நீதிபதி, "விசாரணை முறையாக நடத்தப்பட்டதா? உங்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டதா?" என நீதிபதி கேட்டார்.
நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த சவுக்கு சங்கர் கூறியதாவது :
"அனைத்தும் வழங்கப்பட்டது. விசாரணையில் துன்புறுத்தப்படவில்லை.மேலும் கோவை சிறையில் எனக்கு உளவியல் ரீதியாக பிரச்னை உள்ளது. மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. எனக்கு மருத்துவ உதவியும் அனைவருக்கும் இருக்கக்கூடிய சிறை போலவே வழங்க வேண்டும்" என சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : “நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான வழக்கு – தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
அதனை நீதிபதி மனுவாக வழங்க அறிவுறுத்தியுள்ளார். வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கோவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மீண்டும் நீதிமன்ற காவலுக்கு பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
கோவை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து சவுக்கு சங்கர் தனக்கு கோவை சிறையில் தனி வார்டு வழங்க கேட்டுக் கொண்டார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட பெண் போலீசார் அடங்கிய குழுவினர் அழைத்துச் சென்றனர்.