மக்களவை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்க ப.சிதம்பரம் தலைமையில் குழு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை தயார் செய்ய, 16 பேர் கொண்ட குழுவை நியமித்து காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆயத்தப் பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இதனிடையே, தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியக் கூட்டணியின் நான்கு கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழுவை அறிவித்துள்ளது. இதில் ராகுல் காந்தியின் பெயர் இடம்பெறவில்லை. அதோடு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூட இடம்பெறவில்லை. 16 பேர் கொண்ட இந்த குழுவிற்கு கட்சியின் மூத்த தலைவரான ப. சிதம்பரம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.எஸ்.சிங்தேவ் ஒருங்கிணைப்பாளராகவும் பிரியங்கா காந்தி, சித்தராமையா, சசி தரூர், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், கைக்கங்கம், கௌரவ் கோகோய், பிரவீன் சக்ரவர்த்தி, இம்ரான் பிரதாப்கார்ஹி, கே ராஜு, ஓம்கார் சிங் மார்க்கம், ரஞ்சித் ரஞ்சன், ஜிக்னேஷ் மேவானி, குர்தீப் சப்பல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ”2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான அறிக்கைக் குழுவை காங்கிரஸ் தலைவர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமைத்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க இந்தக் குழு செயல்படும்” என கூறினார்.
முன்னதாக, வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அகில இந்திய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க ஐந்து பேர் கொண்ட தேசியக் குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது. இந்த குழுவிற்கு மோகன் பிரகாஷ் தலைமை தாங்குகிறார். அதில், முன்னாள் முதலமைச்சர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் மட்டுமின்றி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஒப்புக்கொள்ள கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.