புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!
3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார.
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதனையடுத்து 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் 2 நாட்களும் பிரதமர் மோடி உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பிறகு மாநிலங்களவை கூடிய நிலையில், இரு அவைகளிலும் கடந்த 28ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்புரையாற்றினார். இந்நிலையில், 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தில் ‘நீட்’ தேர்வு முறைகேடு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அக்னிபாத் திட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.இன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் தாக்கல் செய்து, விவாதத்தைத் தொடங்கிவைக்கவுள்ளார்.
இதையும் படியுங்கள் : கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு - முடிவுகள் வெளியானது!
இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதி சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா போன்ற புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்திலும் இது குறித்தும் பேச முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.