ஜம்மு - காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணியில் காங். 3 இடங்களில் போட்டி!
ஜம்மு - காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதன்படி, இவ்விரு கட்சிகளும் தலா 3 மக்களவை தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
ஜம்மு, லடாக், உதாம்பூர் மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் ஸ்ரீநகர், ஆனந்த்நாக், பாராமுல்லா மக்களவை தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்த மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி, அக்கூட்டணியிலிருந்து விலகுவதாய் கடந்த சில நாள்களுக்கு முன், அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அக்கட்சி ஜம்மு காஷ்மீரில் தனித்து போட்டியிடப் போவதாய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக முன்னணி ஆஸாத் கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத்தும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால் ஜம்மு காஷ்மீரில் போட்டி கடுமையாகியுள்ளது.