"காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்" - காங். எம்.பி. ராகுல் காந்தி
3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்டாலும் எங்களின் கருத்தியல் போர் தொடரும் என காங். மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றியை உறுதி செய்துள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றியை பதிவு செய்தாலும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்து வருகிறது.
காங்கிரஸ் வரலாற்றில் 1980க்குப் பிறகு, இந்தி பெல்ட்டின் எந்த மாநிலத்திலும் சொந்த ஆட்சி இல்லாதது இதுவே முதல் முறையாகும். காங்கிரஸ் வட்டாரங்களின்படி, கட்சி தோல்வியை மறுபரிசீலனை செய்து லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் என கூறப்படுகிறது. எனினும், காங்கிரஸின் தோல்வி குறித்து பெரிய தலைவர்கள் மவுனம் காத்து வந்தனர்.
இந்நிலையில் தேசிய காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்தாலும் தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம் என தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து காங். எம்.பி ராகுல் காந்தி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து X தளத்தில் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். எங்களின் கருத்தியல் போர் தொடரும். தெலங்கானா மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தெலங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். கடின உழைப்பையும், ஆதரவையும் வழங்கிய காங். தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்"
இவ்வாறு காங். எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
मध्य प्रदेश, छत्तीसगढ़ और राजस्थान का जनादेश हम विनम्रतापूर्वक स्वीकार करते हैं - विचारधारा की लड़ाई जारी रहेगी।
तेलंगाना के लोगों को मेरा बहुत धन्यवाद - प्रजालु तेलंगाना बनाने का वादा हम ज़रूर पूरा करेंगे।
सभी कार्यकर्ताओं को उनकी मेहनत और समर्थन के लिए दिल से शुक्रिया।
— Rahul Gandhi (@RahulGandhi) December 3, 2023