“டெல்லி தேர்தலில் பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் செயல்பட்டது” - மாயாவதி!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று(பிப்.21) ரேபரேலி சென்று பட்டியலின மாணவர்களுடன் உரையாற்றும்போது, “பாஜகவுக்கு எதிராக மாயாவதி எங்களுடன் இணைந்து போராட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் ஏதோ காரணத்தால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அது மிகவும் ஏமாற்றமளித்தது. அனைவரும் ஒன்றிணைந்திருந்தால், பாஜக ஒருபோதும் வெற்றி பெற்றிருக்காது” என்று பேசியிருந்தார்.
அவரின் பேச்சுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி வலிமையாகவும் ஆட்சியிலும் உள்ளதோ அங்கெல்லாம் பிஎஸ்பி மீது பகைமையும், சாதிய மனோபாவமும் காட்டுகிறது. ஆனால், உத்தரப் பிரதேசம் போல காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில் பிஎஸ்பியுடன் கூட்டணி என்ற ஏமாற்றுப் பேச்சுவார்த்தை இருக்கும். இதுதான் காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு” என்று பதில் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் பி டீமாக காங்கிரஸ் செயல்பட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
1. कांग्रेस ने दिल्ली विधानसभा आमचुनाव में इस बार बीजेपी की B टीम बनकर चुनाव लड़ा, यह आम चर्चा है, जिसके कारण यहाँ बीजेपी सत्ता में आ गई है। वरना इस चुनाव में कांग्रेस का इतना बुरा हाल नहीं होता कि यह पार्टी अपने ज्यादातर उम्मीदवारों की जमानत भी न बचा पाए। 1/3
— Mayawati (@Mayawati) February 21, 2025
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்த முறை நடந்த டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டது. அதனால்தான் பாஜகவால் அங்கு ஆட்சிக்கு வர முடிந்தது என்று ஒரு பொதுவான விவாதம் உள்ளது. இல்லையென்றால் காங்கிரஸின் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக ஆகியிருக்காது. பல தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களால் டெபாசிட் கூட பெற முடியவில்லை.
எனவே, ராகுல் காந்தி மற்ற கட்சிகளை, குறிப்பாக பிஎஸ்பி கட்சியின் தலைமையை சுட்டிக்காட்டுவதை விட, தன்னுடைய நிலையை பார்ப்பது நல்லது.
அதேபோல் டெல்லியில் பாஜகவுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய சவால் உள்ளது. இல்லையென்றால் எதிர்காலத்தில் பாஜகவின் நிலைமை என்பது காங்கிரஸ் கட்சியை விட மிகவும் மோசமடைந்து விடும்" என்று குறிப்பிட்டிருந்தார்.