#Coimbatore | ரூ.1 க்கு ஒரு இட்லி விற்பனை செய்யும் பாட்டிக்கு 1.75 சென்ட் இடம் - பத்திரத்தை வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பிரபலமான கமலாத்தாள் பாட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1.75 சென்ட் இடத்திற்கான பத்திரத்தை கொடுத்து உதவியது பாராட்டைப் பெற்று வருகிறது.
இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
“கோவை வடிவேலம்பாளையத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி வியாபாரம் செய்து வரும் கமலாத்தாள் பாட்டி, மக்களுக்கு மலிவான விலையில் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போதைய காலத்திலும் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி வருகிறார்.
ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கி விருந்தோம்பலின் இலக்கணமாகத் திகழும் கமலாத்தாள் பாட்டிக்கு ஏற்கனவே 1.75 செண்ட் நிலம், எனது குடும்பத்தினர் மற்றும் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த நிலையில், தற்போது அந்த நிலத்திற்கான பத்திரத்தை அவரிடம் கொடுத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது சேவைப்பணி என்றென்றும் தொடர அவரை வாழ்த்தி, சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவின்பேரில் ஏழை எளிய மக்களுக்கான எனது சேவை என்றென்றும் தொடரும்”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.