For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இந்திய பகுதிகளை சீனா கட்டமைத்து வருகிறது... பிரதமர் மோடி மெளனம் சாதித்து வருகிறார்...” - மல்லிகார்ஜுன கார்கே காட்டம்!

08:55 AM May 26, 2024 IST | Web Editor
“இந்திய பகுதிகளை சீனா கட்டமைத்து வருகிறது    பிரதமர் மோடி மெளனம் சாதித்து வருகிறார்   ”   மல்லிகார்ஜுன கார்கே காட்டம்
Advertisement

இந்திய நிலப் பகுதியை ஆக்கிரமித்து, வீடுகள் மற்றும் சாலைகளை சீனா கட்டமைத்து வருவதாகவும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி மெளனம் சாதித்து வருவதாகவும் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தலையொட்டி, ஹிமாச்சல பிரதேச மாநிலம், ரோரு பகுதியில் நேற்று (மே 25) நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது,

“நாட்டு மக்கள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை காக்க காங்கிரஸ் போராடிக் கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை காக்காவிட்டால், ஜனநாயகமும் மக்களின் உரிமைகளும் பறிபோய்விடும். பிரதமர் மோடி பணக்காரர்களை மட்டுமே ஆதரிக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஏழைகளின் பக்கம் நிற்கிறது. காங்கிரஸால் உருவாக்கப்பட்ட நாட்டின் பொதுச் சொத்துகளை அதானி-அம்பானிக்கு விற்றுவிட்டது பாஜக அரசு. ஆனால், 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு அவர் கணக்கு கேட்கிறார்.

ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குகூற நாங்கள் தயார். அதேநேரம், தனது 10 ஆண்டுகால ஆட்சிக்கு கணக்குகூற அவர் தயாரா? பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டு, வங்கதேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது காங்கிரஸ். இன்று இந்திய நிலப் பகுதியை ஆக்கிரமித்து, அங்கு வீடுகள் மற்றும் சாலைகளை சீனா கட்டமைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியோ மெளனம் சாதித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நெருக்கடி தருவதற்காக, மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துகிறது பாஜக. இதற்கு உதாரணம் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்.

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுமாறு அவருக்கு நெருக்கடி அளித்தது பாஜக. அவர் விலக மறுத்ததால், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் ஹிந்து-முஸ்லிம் மற்றும் ஜாதி ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அவரது பேச்சுகளில் விரக்தியே வெளிப்படுகிறது. சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு மக்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்ற வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றவில்லை.

20 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் போன்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. புல்லட் ரயில் திட்டத்துக்கான மதிப்பீட்டை ரூ.1 லட்சம் கோடியில் இருந்து ரூ.3 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டனர். இன்னும் அந்த ரயில் திட்டப் பணிகள் நிறைவடையவில்லை. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதி. அதன் பின்னர், 30 லட்சம் அரசுப் பணி காலியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.5,000 கோடியில் புத்தாக்க நிறுவனங்களுக்கான நிதியம் உருவாக்கப்படும். வினாத்தாள் கசிவை தடுக்க புதிய கொள்கை வகுக்கப்படும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயிகளை மையப்படுத்திய ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை கொண்டுவரப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement