For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நிவாரண உதவி கேட்க முதலமைச்சர் டெல்லி செல்லவில்லை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

04:17 PM Dec 19, 2023 IST | Web Editor
நிவாரண உதவி கேட்க முதலமைச்சர் டெல்லி செல்லவில்லை   எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை பிரதமரிடம் சொல்வதற்காக டெல்லி செல்லவில்லை. இந்தியா கூட்டணி தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசிக்க சென்றுள்ளார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று நேரில் பார்வையிட உள்ளதாகவும், நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாகவும் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துவிட்டது. ஆனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றி இருக்கலாம். எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் எடுக்காத அரசு திமுக அரசு தான். 

விவசாயிகள் விளைநிலங்களை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசு  இவ்வாறு மெத்தனப்போக்கோடு செயல்படக்கூடாது. ஊடகத்திலும், பத்திரிகைகளிலும் சென்னை பாதிப்பு குறித்து மக்கள் எந்த அளவில் விமர்சித்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அரசு செயலற்று இருக்கிறது. வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கொடுத்த அறிவிப்பின் படி, முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு இருந்தால் இவ்வளவு உணவு தட்டுப்பாடு குடிநீர் தட்டுப்பாடு வந்திருக்காது. 

மக்களின் குறைகளை பிரதமரிடம் சொல்வதற்காக முதலமைச்சர் டெல்லி செல்லவில்லை. இந்தியா கூட்டணி தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசிக்க சென்றுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், செய்த ஊழல்களை எல்லாம் மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரது டெல்லி பயணம் அமைந்துள்ளது. அற்புதமான குடிமராமத்து திட்டத்தை திமுக அரசு கைவிட்டு விட்டது அதனால் தான் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு கூட செய்யவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு நிவாரணத் தொகை கேட்கிறார். விளம்பரம் வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசை வலியுறுத்தி நிவாரணத் தொகை கேட்கிறார்கள்.

எந்த சேதத்தையும் கணக்கிடாமல் இந்த தொகை எப்படி கேட்கிறார்கள். நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு நிவாரணத் தொகை கேட்பது வேடிக்கையும் விந்தையுமாக உள்ளது. தூத்துக்குடி தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சர் வெள்ளம் பாதித்த பகுதியில் விளையாட்டாக வந்து பார்த்து சொல்கிறார்.”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement