“காலாண்டு விடுமுறையில் #OnlineClass நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை” - TN பள்ளிக் கல்வி துறை எச்சரிக்கை!
காலாண்டு விடுமுறையில் இணைய வழியில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப். 28-ம் தேதி முதல் அக். 6-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது, அவ்வாறு நடத்தினால் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இணைய வழியில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது, “கல்வித் துறையின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சில தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்துவதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன. விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.