#Chidambaram நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலம் விற்பனை! தீட்சிதர்கள் மீது அறநிலையத் துறை பரபரப்பு குற்றச்சாட்டு!
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்று விட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை குற்றம் சாட்டிய நிலையில், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் கோயில் நிர்வாகம் 2014-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கோயில் நிர்வாகம் மீண்டும் தீட்சிதர்கள் வசமானது. அதன் பிறகு கோயில் வருமானம் குறைந்துவிட்டதாக அறநிலையத் துறை குற்றஞ்சாட்டியதுடன், இதுகுறித்த வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முன்பு ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் வருவாய் வந்த நிலையில், தற்போது ரூ.2 லட்சமாக குறைந்துவிட்டதாக தீட்சிதர்கள் தரப்பில் கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று அந்த மனுவில் அறநிலையத் துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ். சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் கோயிலின் வரவு, செலவு கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. நடராஜர் கோயிலுக்கு மன்னர்கள் மற்றும் புரவலர்கள் சுமார் மூன்றாயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய நிலையில் தற்போது ஆயிரம் ஏக்கர் மட்டுமே உள்ளது.
எனவே அதுகுறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அறநிலையத் துறை சார்பில், நடராஜர் கோயிலுக்கு 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில், அதில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் அவர்கள் இஷ்டப்படி தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், 2017-18 முதல் 2021-22 வரையிலான வரவு-செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர். அத்துடன், கோயிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது என்பது குறித்து வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
மேலும் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்.3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.