கொலையில் முடிந்த கோழி மேய்ச்சல் பிரச்னை... தம்பதியரை கொன்ற உறவினர் கைது!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த துலுக்கமுத்தூர் பெரிய தோட்டம் பகுதியை
சேர்ந்த பழனிச்சாமி (82), பர்வதம் (75) என்ற முதிய தம்பதியர், தங்களது தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வெளியே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது வீட்டின் அருகில் இருக்கும் உறவினர் ரமேஷ் (46) என்பவர் திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளார். ரமேஷ் கோழி, ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில், இவரது கோழி அவ்வப்பொழுது பழனிச்சாமி தோட்டத்திற்குள் புகுந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் பழனிச்சாமி, பர்வதம் இருவரும் ரமேஷிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவு கோழி மேய்ச்சல் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் தம்பதியர் இருவரையும் வெட்டி கொலை செய்துள்ளார்.
பின்னர் மது போதையில் தப்பிச் செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காலை பழனிச்சாமி வீடு திறந்து இருப்பதை கண்ட அப்பகுதியினர் உள்ளே சென்று பார்த்த பொழுது தம்பதியர் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற அவிநாசி போலீசார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்ட போது, ரமேஷ் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழி மேய்ச்சல் சண்டை கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.