#ChennaiAirShow | "5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது" - அண்ணாமலை குற்றச்சாட்டு!
மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 5 பேர் உயிரிழந்ததை விபத்தாக கடந்து செல்ல முடியாது என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது :
" இந்திய விமானப்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததும், 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
இதையும் படியுங்கள் : மாபெரும் வெற்றி பெற்ற #Maharaja | இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை பரிசளித்த படக்குழு!
பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்.
5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது; இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த தமிழ்நாடு அரசே முழு பொறுப்பு; பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.