‘மத்திய அரசின் PMGSY திட்டமும், மாநில அரசின் MGSMT திட்டமும் வேறு’ - தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு!
மத்திய அரசின் 'பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டமும், முதலமைச்சரின் 'கிராம சாலை மேம்பாட்டுத் திட்டமும் வெவ்வேறானவை என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.
"மத்திய அரசின் 'பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY)' திட்டத்தை மாநில அரசு முதல்வரின் 'கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்(MGSMT)' என்று பெயர் மாற்றி புதிய திட்டமாக அறிமுகம் செய்துள்ளது" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு, தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் தான், பின்னர் நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்திருந்தார். மேலும் நாட்டையும் பிற மாநிலங்களையும் வழிநடத்திச் செல்லும் நலத்திட்டங்களை திமுக அரசு அறிமுகப்படுத்தி வருவதாகவும், மக்களின் நலனுக்காக, இந்த திராவிட அரசு அறிமுகப்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு நாடு முழுவதும் விரிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் திட்டமும், மாநில அரசின் திட்டமும் வெவ்வேறானவை என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த குழு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல!
வதந்தி:
"மத்திய அரசின் 'பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY)' திட்டத்துக்கு மாநில அரசு முதல்வரின் 'கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்(MGSMT)' என்று பெயர் கொடுத்து புதிய திட்டமாக அறிமுகம் செய்துள்ளது" என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
உண்மை என்ன?
- கிராமங்களை தரமான சாலைகள் மூலம் இணைப்பது, கிராமங்களில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது ஆகியவையே இத்திட்டம். மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் வருமானம், கல்வி, வேலைவாய்ப்பு ஊள்ளிட்டபல்வேறு சமூக- பொருளாதார காரணிகளைக் கொண்டு MGSMT வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டம் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.
பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY)
- மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைந்துள்ள சாலைகளுடன் குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராம சாலைகளை தார் சாலைகள் மூலம் இணைப்பதே இத்திட்டமாகும்.
- இத்திட்டத்தின் கீழ் சாலைகளை அமைக்க 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்கிறது.
PMGSY அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு தொடர்ந்து கிராமப்புற சாலைகளை மேம்படுத்த பெரும் நிதியை முதலீடு செய்துள்ளது. எனவே, மத்திய அரசின் PMGSY திட்டமும், மாநில அரசின் MGSMT திட்டமும் வெவ்வேறானவை என குறிப்பிட்டுள்ளது.