இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என சத்தியம் செய்ய முடியுமா? நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழக ஆளுநரை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக விமர்சித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தான் வகிக்கும் பதவிக்குரிய பொறுப்பின் மீது துளியும் அக்கறையில்லாத உதயநிதிஸ்டாலின், ஐ.பி.எஸ்., அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி அடிப்படையின்றி விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?
திமுக மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்தைத் திசைதிருப்ப இந்தி திணிப்பு, மதவாதம் என்று வாய்க்கு வந்ததைக் கூறும் முன், தேசிய கல்விக் கொள்கையில் 'இந்தி கட்டாயம்' என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது எனத் திமுகவால் காட்ட முடியுமா? இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என சத்தியம் செய்ய முடியுமா?
ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட உதயநிதி முதலில் இந்திய அரசியலமைப்பின் மாண்பைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சாசனப்படி நியமிக்கப்பட்ட ஆளுநர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன்.
மேலும், திமுகவின் நிர்வாக சீர்கேடால் சட்டம் ஒழுங்கு, ஊழல், முறைகேடு, பெருகும் போதைப் புழக்கம் ஆகியவற்றை எதிர்த்து தான் தமிழகம் போராட வேண்டும், போராடிக் கொண்டும் இருக்கிறது. கூடிய விரைவில் அந்தப் போராட்டத்தில் தமிழகம் வெல்லும். புதிய ஆட்சி அமையும். எனவே, எஞ்சியிருக்கும் 7 மாதங்களில் ஆளுநரை அடிப்படையின்றி விமர்சிக்காமல், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.