மறக்க முடியுமா கலைஞரின் சமூக நீதிப் பணிகளை? - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார்!
திமுக முன்னாள் தலைவரும், ஐந்து முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்த கருணாநிதி அவர்களின் நினைவு நாள் இன்று. இந்த நாளில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் வாழ்வுக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளைப் பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நினைவு கூர்ந்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்காகப் பல வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவற்றில் சில, 1971 ஆம் ஆண்டு, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 16% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டது. பின்னர், 1990 ஆம் ஆண்டு, பட்டியலினத்தவருக்கு 18% இட ஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 1% இட ஒதுக்கீடும் முழுமையாகப் பிரித்து வழங்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு, அருந்ததியின மக்களுக்காக 3% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது அந்தச் சமூகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காகச் சிறப்பு உதவித்தொகைகள், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கப் பயிற்சி மையங்கள் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலம், அவர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற வழிவகை செய்யப்பட்டது. இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், தாட்கோ மற்றும் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தருதல் போன்ற திட்டங்கள், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தின.
மேலும் நாட்டிலேயே முதன்முறையாக ஆதிதிராவிடர் நலனுக்கென்று தனியாக ஒரு துறையும், டாக்டர் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகமும் அமைக்கப்பட்டன என தெரிவித்தார்.