“முதன்முறையாக எனக்காக பிரசாரம் மேற்கொள்கிறேன்...வாய்ப்பு அளியுங்கள்...” - #PriyankaGandhi உரை!
வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங். சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, கேரளாவில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தொடர்ந்து, வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய பேரணியுடன் பிரியங்கா காந்தி சென்றார். இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்காவின் தாயாரும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி, சகோதரரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி பேரணியாக சென்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்கா காந்தி மேடையில் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,
“வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். எனது 17 வயதில் எனது தந்தைக்கு வாக்கு சேகரித்துள்ளேன். பலமுறை கட்சி நிர்வாகிகளுக்குப் பிரசாரம் செய்துள்ளேன். முதன்முறையாக இப்போது எனக்காகப் பிரசாரம் மேற்கொள்கிறேன். மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தில் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். இந்த பேரணியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வயநாட்டு மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகிறேன். எனக்கு வாய்ப்பு அளியுங்கள்”
இவ்வாறு பேசியுள்ளார்.