மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (15.11.2023) மாலையுடன் நிறைவு பெற்றது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ. 7 ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற நவ. 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல, 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திலும் நவ. 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி, இந்த இரு மாநிலங்களிலும் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. கடந்த சில தினங்களாக இந்த இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவ. 7ல் ஒரே கட்டமாக நடைபெற்றது. ஐந்து மாநிலத் தேர்தலில் ராஜஸ்தானில் வருகிற நவ. 25 ஆம் தேதியும் தெலங்கானாவில் நவ. 30 ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.