"பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது" - அமைச்சர் சிவசங்கர் உறுதி!
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பேருந்து கட்டணம் உயர்வு என்று வதந்தி பரவுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறோம். பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை தெரிவித்து இருக்கிறார்.
எனவே இப்பொழுதும் அதனை உறுதிப்படுத்துகிறோம், ஏழை எளிய மக்கள் மீது சுமை ஏற்றப்படக்கூடாது என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கான சூழல் பலமுறை ஏற்பட்டபோதும் பேருந்து கட்டணத்தை ஏற்றக்கூடாது என்ற அறிவுரையை எங்களுக்கு வழங்கியிருக்கிறார். இப்பொழுதும் தெளிவாக சொல்கிறேன் அரசு போக்குவரத்து கழகத்தை பொருத்தவரை பேருந்து கட்டணம் நிச்சயம் இருக்காது என்று உறுதிப்பட தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா கூறியிருக்கிறார். பாரதிய ஜனதாவின் கனவு என்ன என்பதை, அதிமுகவை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவது தான் பாஜகவின் கனவாக இருக்கிறது. எனவே திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய வாக்குகளை பிரிக்கலாம் என்ற எண்ணத்தோடு தான் பல்வேறு புதிய கட்சிகளை ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக களத்தில் இறக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.
இப்பொழுதும் அந்த தந்திரத்தை ஒரு புது முயற்சியாக எடுத்து இருக்கிறார்கள். வருகின்ற தேர்தலில் இது அத்தனையும் முறியடித்து திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும்.
பாஜக எங்களை விழுங்குவதற்கு நாங்கள் என்ன புழுவா? என்ற எடப்பாடி பேச்சுக்கு பதிலளித்தவர், "எடப்பாடி ஒவ்வொரு முறையும் ஒன்று பேசுவார். ஆனால் நடைமுறைக்கு வரும்போது அது வேராக இருக்கும். 2036 வரை பாஜகவில் கூட்டணி கிடையாது என்று சொன்ன அவர் தான் அமித்ஷாவுடன் மேடையில் மௌனமாக அமர்ந்திருந்தார். இப்பொழுது அவர் பேசுகிறார், இன்னும் சில நாட்கள் கழித்து என்ன பேசுகிறார் என்பதை காலம் பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார்.