பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது, அவைகளின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மக்களவையின் 100 எதிர்க்கட்சி உறுப்பினர்களையும், மாநிலங்களவையின் 46 எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்து அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், நாளைமுதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால் அனைத்து எம்பிக்களின் இடைநீக்கத்தையும் ரத்து செய்ய அரசின் சார்பாக அவைத் தலைவர்களுக்கு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மேலும், எம்.பி.க்கள் உறுப்பினர்களாக இருக்கும் நாடாளுமன்றக் குழுக்களிலும் அவர்களது இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். மக்களவை பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்து இருவர் புகைக் குப்பிகளை வீசிய விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.