Budget 2025 | மகா கும்பமேளா உயிரிழப்பு விவகாரம் : எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு !
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும். மத்தியில் பாஜக 3வது முறையாக ஆட்சியமைத்தபின் தாக்கல் செய்யப்படும் 2வது பட்ஜெட் இதுவாகும்.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்த பாஜக கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தது. தற்போது, 2வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனிடையே, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை முன்னிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்ற நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார். பின்னர் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் கூடியது. அப்போது மகாகும்பமேளா உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிரகட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதோடு வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் வெளிநடப்பு செய்த எதிர்கட்சியினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்த பின் மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு இடையே நிதியமைச்சர் பட்ஜெட்டை வசித்து வருகிறார்.