மதுரை மக்களின் 200 கோடி வரி பணம் 'சுவாகா' - செல்லூர் கே.ராஜு விமர்சனம்!
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மதுரையில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதற்காக தமிழக முதல்வர் மதுரை வருகிறார். மதுரையில் சிறிய சாலைகள் முதல் பெரிய சாலைகள் வரை நான்கரை ஆண்டுகளாக தோண்டபட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படும் சாலைகள் 3 மாதங்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை. சாலைகள் அமைக்க திமுக அரசு 40 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள், இதனால் தரமான ஒப்பந்தகாரர்கள் சாலை அமைக்க முன்வருவதில்லை. மதுரை மாவட்டத்தின் நிலைமையை அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்து செல்வதில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை நகருக்குள் வந்தால் மட்டுமே மக்களின் துன்பங்கள், துயரங்கள் தெரிய வரும். அமைச்சர் மூர்த்தி என்னுடைய தொகுதி மீது அதிக அக்கறை எடுத்து கவனம் செலுத்துகிறார்.
அதிமுக ஆட்சியில் ரூ.1,296 கோடி மதிப்பில் முல்லை பெரியாறு அணையில் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை முதல்வர் நாளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். மதுரை மாநகராட்சி பகுதியில் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில் முதல்வர் ஏன் இத்திட்டத்தை திறந்து வைக்க வேண்டும்.
குடிநீர் திட்டத்தை ஏன் அவசர கதியில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளனர். மதுரை மாநகராட்சிக்கு மேயர் இல்லை, மண்டலத் தலைவர்கள் இல்லை, மாநகராட்சி செயல்படாமல் முடங்கி உள்ளது. 2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாநகராட்சி வரி முறைகேட்டில் யார் யார் தவறு செய்தார்கள் என்பதை கண்டறிந்து தண்டிக்கப்படுவார்கள். மதுரை மக்களின் 200 கோடி வரி சுவாகா செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து தனிமனிதன் வெளியே செல்வதால் எந்தவொரு பாதிப்புமில்லை. ஆலமரத்தில் உள்ள பழுத்த இலை கீழே விழுவதால் அந்த ஆலமரம் சாய்ந்து விட்டது என அர்த்தம் இல்லை.
தமிழக அரசியலில் புதிதாக யார் வந்தாலும் மக்கள் மத்தியில் இரண்டு தலைவர்கள் மட்டுமே உள்ளனர். ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றொருவர் முதல்வர் ஸ்டாலின். புதிதாக வரும் கட்சிகள் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என சொல்வார்கள். செங்கோட்டையனுக்கு மக்கள் ஓட்டு போடவில்லை, இரட்டை இலைக்காக, அதிமுகவுக்காக தான் மக்கள் ஓட்டு போட்டார்கள். செங்கோட்டையன் வெளியேறி போனது நியாயமா? என்று தெரிவித்துள்ளார்.