உ.பி.யில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது!
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் தொகுதியில் 4-ம் கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், அந்த இளைஞர் வெவ்வேறு அரசு அடையாள அட்டைகளுடன், வெவ்வேறு நேர இடைவெளியில் எட்டு முறை பாஜகவுக்கு வாக்களிப்பதைக் காண முடிந்தது.
இந்த வீடியோவை காங்கிரஸ், சமாஜவாதி கட்சியினர் பகிர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக உத்திரப் பிரேதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ராஜன் சிங் என்ற 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். இதனிடையே உத்திரப் பிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, சிறுவன் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்துள்ளார்.