For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜகவை பெரும்பான்மை இந்துக்களே புறக்கணித்துவிட்டனர்” - விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை!

12:09 PM Jun 07, 2024 IST | Web Editor
“பாஜகவை பெரும்பான்மை இந்துக்களே புறக்கணித்துவிட்டனர்”   விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை
Advertisement

பாஜக பெற்றுள்ள வெற்றியானது தோல்வியின் வலி சுமந்த வெற்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெரும்பான்மை இந்துக்கள் பாஜகவைப் புறக்கணித்துள்ளனர்! அரசமைப்புச் சட்டமும் சனநாயகமும் தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது! சிறுத்தைகளுக்கான அரசியல் அங்கீகாரம் ஆறுதல் அளிக்கும் அருமருந்து! இந்தியா கூட்டணிக்கு பெருவெற்றி வழங்கிய மக்களுக்கு மனமார்ந்த நன்றி!

ஏழு கட்டங்களாக ஏப்ரல் -19 முதல் ஜூன்-01 வரையில் நடந்த பதினெட்டாவது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் இந்திய மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, பாஜகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட சங்பரிவார் கும்பலுக்கும் சரியான பாடம் புகட்டுவதாக அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியதிகார ஆணவத்தின் உச்சியில் நின்று ஆட்டம் போட்ட சனாதன - பெருமுதலாளித்துவச் சுரண்டல் கும்பலின் இறுமாப்பை இது நொறுக்கியுள்ளது.

குறிப்பாக, அடுத்தடுத்து ஆட்சியைக் கைப்பற்றிய அதிகார மமதையால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானங்களையே அசைக்கும் நோக்கில், "மதம் சார்ந்த ஒரே அரசு, மதம் சார்ந்த ஒரே தேசியம், மதம் சார்ந்த ஒரே தேசம்" போன்ற பன்மைத்துவத்திற்கு எதிரான கட்டமைப்புகளை நிறுவிட அவர்கள் தீட்டிய கனவுத் திட்டங்களையெல்லாம் தகர்த்துத் தவிடு பொடியாக்கியுள்ளது.

இத்தேர்தல், "சனாதன- கார்ப்பரேட்" கொள்ளைக் கும்பலுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய ஒரு மாபெரும் அறப்போரே ஆகும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 'இந்தியா கூட்டணி' கட்சிகள் யாவும் சுட்டிக்காட்டின. அத்துடன், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் இதன் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றான நாடாளுமன்ற சனநாயகத்தையும் பாதுகாக்கவே இந்திய மக்களோடு இக்கூட்டணி இணைந்து களமாடியது. இதனடிப்படையில், காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 99 இடங்கள் உள்ளிட்ட 234 இடங்களில் 'இந்தியா கூட்டணி' பெற்றுள்ள வெற்றி இந்திய மக்களுக்கான மாபெரும் வெற்றியே ஆகும்.

இந்தியா கூட்டணியால் ஆட்சியமைக்க இயலவில்லை என்றாலும், பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு மிகப்பெருமளவில் அதிர்ச்சியளிக்கும் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜகவுக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிட்டவில்லை. மாறாக, கடந்த தேர்தலைவிட தற்போது 63 இடங்களை அக்கட்சி இழந்துள்ளது. அத்துடன், அவர்தம் கூட்டணி ஒட்டுமொத்தமாக 300 இடங்களைக்கூட எட்டவில்லை. எனினும், கூட்டணி கட்சிகளின் கடுமையான பேர நெருக்கடிகளுடன் கூடிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது.

பாஜக பெற்றுள்ள இவ்வெற்றியானது தோல்வியின் வலி சுமந்த வெற்றியே ஆகும். தனிப்பெரும்பான்மை இல்லாத வகையில்; ஐந்தாண்டுகளுக்கு நிலையாக ஆட்சி நடத்தமுடியாத வகையில்; ஆட்சியமைப்பதற்கே பிற கட்சிகளின் தயவை நாடும் வகையில்; அதிகார அகந்தையென்னும் நச்சுப் பற்களைப் பிடுங்கும் வகையில் இந்திய மக்கள் பாஜகவுக்கு எதிராகவே இத்தீர்ப்பை எழுதியுள்ளனர்.

இந்தியர்களை 'இந்து சமூகத்தினர்' என்றும், 'இந்து அல்லாத பிற மதத்தினர்' என்றும் பாகுபடுத்தித் தொடர்ந்து அரசியல் ஆதாயம் காணும் பாஜகவினரின் சதி அரசியல் முயற்சிகளை முறியடித்துள்ளனர். குழந்தை ராமருக்கு கோயிலைக் கட்டிக் கொண்டாட்டம் நடத்திய உத்தரபிரதேச மண்ணிலேயே பாஜகவுக்கு மக்கள் படுதோல்வியைப் பரிசாக அளித்துள்ளனர். அதாவது, பெரும்பான்மை இந்துச் சமூகமே பாஜகவைப் புறக்கணித்துள்ளது என்பதுதான் இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் இயல்பான உண்மையாகும்.

இத்தகைய வரலாற்றுத் தீர்ப்பை வழங்கிய இந்திய மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.  அத்துடன், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 40 வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்து சாதிய- மதவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தியுள்ள தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், எமது கால்நூற்றாண்டுக் கனவை நனவாக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கேற்ப, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எமக்கு வெற்றி வாகை சூட்டி, மையநீரோட்ட அரசியலில் எம்மை அங்கீகரித்துள்ள அத்தொகுதிகளைச் சார்ந்த வாக்காளப் பொதுமக்கள் யாவருக்கும் எமது உளங்கனிந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.

தமிழ்நாட்டில் இதுபோன்ற விவரிக்க இயலாத கடும் நெருக்கடிகள் நிறைந்த ஒரு நெடும் பயணத்தை வேறு எந்தவொரு இயக்கமும் கண்டிருக்க வாய்ப்பில்லை. இன்றும் அவற்றை எதிர்கொண்டு கொள்கை உறுதி குன்றாமல் வீறுநடைபோடும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாக, ஊக்கமூட்டும் மாமருந்தாக இந்த மகத்தான அங்கீகாரத்தை வழங்கியுள்ள மக்களுக்கு மகிழ்வு பெருக்கோடு மனங்குளிர்ந்த நன்றியைப் படைக்கிறோம்.

உழைக்கும் மக்களின் விடுதலைக்கான எமது பயணம் உறுதிகுலையாமல் தொடரும்! சமத்துவ இலக்கை எட்டும் வரையில் எமது சனநாயக அறப்போர் நீளும்! அமைப்பாய்த் திரள்வோம்! அங்கீகாரம் பெறுவோம்! அதிகாரம் வெல்வோம்! என்னும் சிறுத்தைகளின் கனவு செயலென மெய்ப்படும்!”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement